×

போர் புரிய வேண்டிய அவசியமில்லை ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாமாக இந்தியாவுடன் இணைந்திடும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

புதுடெல்லி: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க போர் புரிய வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரின் வளர்ச்சியை பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள். அது இந்தியாவுடன் இணைக்கப்படும்’ என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் தற்போது சூழல் கணிசமாக மேம்பட்டுள்ளது.

அங்கு ஆயுதப்படை சிறப்பு சட்டம் தேவைப்படாத காலம் விரைவில் வரும். அது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் முடிவெடுக்கும். காஷ்மீரிலும் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அதே போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான உரிமைகோரலை இந்தியா ஒருபோதும் கைவிடாது. நாம் போர் புரிந்து அப்பகுதியை வலுக்கட்டாயமாக மீட்க வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரின் வளர்ச்சியையும் அமைதியையும் பார்க்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாகவே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்.

அத்தகைய கோரிக்கைகள் இப்போது எழத் தொடங்கி உள்ளன. எனவே இந்தியா எதுவும் செய்யாமலேயே, ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து விடும். மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று 3வது முறையாக ஆட்சி அமைக்கும் போது பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தும்.

அதே சமயம், நாங்கள் அரசியலமைப்பை மாற்ற மாட்டோம். இடஒதுக்கீடுகள் எதுவும் மாறாது. இதைப் பற்றி காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. வாக்கு வங்கி ஆதாயத்திற்காக இந்து, முஸ்லிம் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் காங்கிரஸ் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

The post போர் புரிய வேண்டிய அவசியமில்லை ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாமாக இந்தியாவுடன் இணைந்திடும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Occupied ,India ,Rajnath Singh ,New Delhi ,Pakistan ,Kashmir ,Kashmiris ,Defense Minister ,Occupied Kashmir ,
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...